எம்.பி.யைத் தள்ளிவிட்ட காவலர்கள்! முதல்வர் விழாவில் தள்ளுமுள்ளு!

ர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, முடிவுற்ற பணிகள் திறப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

Advertisment

ss

இது முடிந்ததும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்புப் பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. இருந்தும், தனது தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை முதல்வரைச் சந்தித்துக் கொடுக்க தாமாக முன்வந்திருந்தார்.

சாலையிலேயே அவரது காரை வழிமறித்த போலீசார், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே முதல்வரைச் சந்திக்க அனுமதிக்க முடியும் என்று கறாராக கூறியிருக்கிறார்கள். எம்.பி. செந்தில் குமாரோ, தர்மபுரி மாவட்டத்தில் தும்பலஅள்ளி, என்னேகோல் புதூர் அணைக்கட்டு திட்டம், ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன. இதுதொடர்பாக மக்கள் பிரதிநிதியாகிய நான் முதல்வரை நேரில் சந்தித்து மனுக் கொடுக்கவேண்டும் என்று கேட்டும் அனுமதிக்கவில்லை.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த எம்.பி., மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு, தடுப்பை மீறி கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது, எம்.பி. செந்தில்குமாரின் நெஞ்சில் கைவைத்து போலீசார் தள்ளியதால், பரபரப்பு உண்டானது. முதல்வரின் பாதுகாப்பு முக்கியம்தான் என்றாலும், மக்கள் பிரதிநிதியின் குரலுக்கு செவிசாய்க்காமல், காவல்துறையினரை ஏவி தடுத்து நிறுத்துவதாக, தர்மபுரி தி.மு.க.வினர் கொந்தளிக்கின்றனர்.

-அருண்பாண்டியன்

கொரோனா குழப்பம்! அலட்சியத்தால் மாறிப்போன உடல்கள்!

ss

புதுச்சேரி முந்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணிபுரிபவர் ஞானசேகர். இவரது 70 வயது தாயார் 17ந்தேதி திடீரென வீட்டிலேயே உயிரிழந்துவிட, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதையடுத்து, சிபாரிசின் பேரில் தனது தாயாரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவந்து தேங்காய்த்திட்டு சுடுகாட்டில் எரியூட்டினார் ஞானசேகர். இதற்கிடையே, புதுச்சேரி வில்லியனூர் மணவெளி திரிவேணி நகரில் வசித்து வந்த யோகானாந்த் மனைவி குணவள்ளி, மூச்சிரைப்பு நோய் காரணமாக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 16ந்தேதி தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. இதையடுத்து, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், கொரோனா சோதனைக்குப் பிறகு பிணவறைக்கு அனுப்பப்பட்டது. கொரோனா தொற்று இல்லையென முடிவானதும் பிணவறைக்கு சென்ற போது, குணவள்ளியின் உடலைக் காணவில்லை.

Advertisment

கொரோனா தொற்று ஏற்பட்ட ஞானசேகரின் தாயாருக்கு பதிலாக தொற்று இல்லாத குணவள்ளியின் உடலைக் கொடுத்தனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதுதெரியாமல், ஞானசேகர் தங்களது வழக்கப்படி குணவள்ளியின் உடலுக்கு எரியூட்டவும் செய்திருக்கிறார். இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், "தவறு நடந்துவிட்டது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'’என்று உறுதியளித்தார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் குணவள்ளி யின் அஸ்தி மட்டுமே அவரது குடும்பத்திற்கு கிடைத்தது. ஞானசேகரின் தாயார் உடல் மருத்துவமனை நிர்வாகத்தால் எரியூட்டப்பட்டது.

-சுந்தரபாண்டியன்

கள்ளச்சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய எஸ்.ஐ!

ssதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பது மிட்டாளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அஜீத், கள்ளச்சாராயம் விற்றதற்காக கைதாகி சிறையிலடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். இவரது தாய்மாமனான ஜானகி ராமனும் கள்ளச்சாராயம் விற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்படிப்பட்ட கள்ளச்சாராய பின்னணி கொண்ட அஜீத், கடந்த 16ந்தேதி தனது பிறந்தநாளை வீட்டில் நண்பர்கள், உறவினர் களுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடினார். இந்த விழாவில் உமராபாத் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளரான விஸ்வநாதன் கலந்துகொண்டார். அவரை வரவேற்கும் விதமாக சால்வை அணிவித்து அஜீத் மரியாதை செய்ய, பதிலுக்கு எஸ்.ஐ. விஸ்வநாதன் அன்பாக கேக்கை அஜீத்திற்கு ஊட்டிவிட்டு பிறந்தநாள் வாழ்த் தினைத் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தகவல் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. கையோடு, அஜீத்திற்கு எஸ்.ஐ. விஸ்வநாதன் கேக் ஊட்டும் படத்தையும் அவ ருக்கு அனுப்பியுள்ளனர். அதிர்ந்து போன எஸ்.பி. விஜயகுமார், முதல்வர் வரும் நேரத்தில் இது சர்ச்சையானால் பிரச்சனையாகிவிடும் என்பதை உணர்ந்து, உடனடியாக இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், அனைத்தும் உண்மை எனத் தெரியவர, எஸ்.ஐ. விஸ்வநாதனை ஆயுதப்படைக்கு தூக்கியடித்து அதிரடி காட்டியிருக்கிறார்.

-து.ராஜா